அரசு முழு அதிகாரம் வழங்கிய பின்பு 3 மாதத்தில் லோக் அயுக்தாவில் 60 வழக்குகள் பதிவு
அரசு முழு அதிகாரம் வழங்கிய பின்பு 3 மாதத்தில் லோக் அயுக்தாவில் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் ஊழல் தடுப்பு படை ரத்து செய்து லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஐகோர்ட்டு உத்தரவின்படி கர்நாடக அரசும், ஊழல் தடுப்பு படையை ரத்து செய்துவிட்டு, லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, கடந்த 3 மாதங்களாக ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்துவதுடன், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையும் லோக் அயுக்தா போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடகத்தில் லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம் கிடைத்த 3 மாதத்தில் மாநிலம் முழுவதும் 60 வழக்குகள் பதிவாகி உள்ளன. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள 31 மாவட்டங்களிலும் உள்ள லோக் அயுக்தா போலீஸ் நிலையங்களில் 60 வழக்குகள் பதிவாகி இருக்கிறது.
பெங்களூருவில் மட்டும் 12 வழக்குகள் பதிவாகி உள்ளது. ஊழலை அடியோடு ஒழிக்க லோக் அயுக்தா நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இப்போது அல்ல, இனிவரும் நாட்களிலும் ஊழல் அதிகாரிகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் தெரிவித்துள்ளார்.