போதை பழக்கத்தில் பஞ்சாப்பை முந்தி விட்டது கேரளாவில், லாட்டரி மூலம் ஏழைகளிடம் கொள்ளை கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டு
ேகரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
கொச்சி,
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ேகரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் லாட்டரி மற்றும் மது விற்பனை விவகாரத்தில் மாநில அரசை வெளிப்படையாகவே அவர் சாடியுள்ளார். கொச்சியில் நூல் வெளியீடு நிகழ்ச்சியில் ேபசிய அவர், போதைப்பொருளுக்கான தலைநகர் விவகாரத்தில் பஞ்சாப்பை கேரளா முந்தி விட்டதாக குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'நமது வளர்ச்சிக்கு மதுவும், லாட்டரியும் போதும் என நாம் முடிவு செய்திருக்கிறோம். 100 சதவீதம் கல்வியறிவு கொண்ட ஒரு மாநிலத்துக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்? மாநிலத்தின் வருவாய்க்கான முக்கிய ஆதாரமாக லாட்டரியும், மதுவும் இருப்பதை நினைத்து, மாநிலத்தின் தலைவர் என்ற முறையில் வெட்கப்படுகிறேன். லாட்டரி என்றால் என்ன? இங்கு இருக்கும் யாராவது லாட்டரி சீட்டு வாங்கியது உண்டா? வெறும் ஏழைகள் மட்டுமே லாட்டரி சீட்டு வாங்குகிறார்கள். அவர்களை நீங்கள் கொள்ளையடிக்கிறீர்கள். உங்கள் மக்களை மதுவுக்கு அடிமைப்படுத்துகிறீர்கள்' என சாடினார்.
மாநில அரசு மீதான கவர்னரின் இந்த குற்றச்சாட்டுகேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.