பா.ஜனதாவின் அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும்
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடக கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
விசாரணை நடத்தப்படும்
கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. கடந்த முறை நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இதுகுறித்து நாங்கள் விவாதித்தோம். விசாரணை நடத்த எந்த ரீதியில் குழுக்களை அமைப்பது என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பா.ஜனதா அரசின் அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். எந்த வகையான விசாரணை என்பது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா இறுதி முடிவு எடுப்பார்.
பா.ஜனதாவினர் வித்தியாசமான முறையில் ஊழல்களை செய்துள்ளனர். தொழில்நுட்ப முறைகேடுகள் நடந்துள்ளன. பிட்காயின் விஷயத்திலும் முறைகேடுகள் செய்துள்ளனர். இத்தகைய முறைகேடுகளை விசாரிக்க சைபர் குற்றங்களில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள். தொழில்நுட்பங்கள் நன்றாக தெரிந்த அதிகாரிகள் இருக்க வேண்டும்.
ஊழல்களின் தன்மை
சில ஊழல்கள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) அமைக்க வாய்ப்புள்ளது. இன்னும் சில ஊழல்கள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் மட்டத்திலான அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது.அதனால் ஊழல்களின் தன்மையை பொறுத்து விசாரணை நடைபெற உள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தால் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். எந்த விதமான பாகுபாடும் இன்றி விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு மந்திரி பிரியங்க் கார்கே கூறினார்.