ஒடிசா ரெயில் விபத்தில் 6 தமிழர்களின் நிலை என்ன? தமிழ்நாடு திரும்பிய அதிகாரிகள் கூறிய தகவல்?
ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.
சென்னை,
மேற்குவங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த வெள்ளிக்கிழமை வந்துகொண்டிருந்தது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் ரெயில் சென்றுகொண்டிருந்தது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. அப்போது, ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் இருந்து தடம் மாறி சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் அதிவேகமாக வந்த பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் கோரமண்டல் ரெயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து 275 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, விபத்துக்குள்ளான ரெயில்களில் சென்னை வரவிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஒன்று என்பதால் விபத்தில் தமிழர்கள் யாரேனும் சிக்கினார்களா? என்பதை அறியவும் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கவும் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பீகாருக்கு அனுப்பியது. பீகார் சென்ற தமிழ்நாடு அதிகாரிகள் ரெயில் விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினர். அதேவேளை, இந்த விபத்தில் தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
பீகார் சென்ற அதிகாரிகள் அங்கிருந்து நேற்று இரவு சென்னை திரும்பினர். அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விபத்துக்குள்ளான சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்த தமிழர்களில் 17 பேர் ரெயிலில் ஏறவில்லை. மீதி நபர்கள் அனைவரையும் தமிழ்நாடு அவசர உதவி மையம், ரெயில் போலீஸ், தமிழ்நாடு காவல்துறை என அனைத்து வழிகளிலும் தொடர்புகொண்டு அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துள்ளோம்.
6 பேரை மட்டும் தொடர்பு கொள்ள இயலவில்லை. எனென்றால் அவர்கள் கவுன்டர்கள் மூலமாக டிக்கெட் வாங்கி இருந்தார்கள். அவர்களின் மொபைல் எண்கள் கிடைக்கப்பெறவில்லை. ஏனினும் அவர்கள் பயணித்த ரெயில் பெட்டியில் பயணித்த சக பயணிகளிடம் தொடர்புகொண்டு அந்த பெட்டியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துள்ளோம்.
மருத்துவமனைகளில் 382 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழர்கள் யாரும் இல்லை. எனவே இதுவரை கிடைத்த தகவல்படி தமிழர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். அனைவரும் அவரவர் இடங்களுக்கு சென்றுள்ளனர். நேற்று மட்டும் ஒரே ஒரு நபர் தனியாக சென்னைக்கு தனி ரெயில் மூலம் காயங்களுடன் வந்தார். அவருக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் பத்திரமாக உள்ளனர்' என்றார்.