சாக்கடை கால்வாயில் பிணமாக மீட்கப்பட்ட வியாபாரி, கள்ளக்காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டது அம்பலம்; கைதான தம்பதி பரபரப்பு வாக்குமூலம்


சாக்கடை கால்வாயில் பிணமாக மீட்கப்பட்ட வியாபாரி, கள்ளக்காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டது அம்பலம்; கைதான தம்பதி பரபரப்பு வாக்குமூலம்
x

சாக்கடை கால்வாயில் பிணமாக மீட்கப்பட்ட வியாபாரி கள்ளக்காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும் கைதான தம்பதி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பெங்களூரு:

சாக்கடை கால்வாயில் பிணம்

பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெலதூர் பகுதியில் கடந்த 5-ந் தேதி சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கவரால் உடல் சுற்றப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடலை காடுகோடி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் பீகாரை சேர்ந்த ஓம்பிரகாஷ் சிங் என்பதும், அவர் பெங்களூருவில் தங்கி இருந்து வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் ஓம்பிரகாஷ் சிங்கின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவர் யாரிடம் எல்லாம் கடைசியாக பேசினார் என்று ஆய்வு செய்தனர். அப்போது அவர் விஷால் என்பவரிடம் அடிக்கடி பேசி இருந்தது தெரியவந்தது. விஷாலும், அவரது மனைவி ரூபியும் பெலதூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்ததும் தெரியவந்தது. இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற போலீசார் விஷாலை பிடித்து விசாரித்தனர்.

கள்ளக்காதல்

அப்போது மனைவி ரூபியுடன் சேர்ந்து ஓம்பிரகாஷ் சிங்கை கொலை செய்ததை விஷால் ஒப்புக்கொண்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து தம்பதி அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது:-

பீகாரை சேர்ந்த விஷால், தனது மனைவி ரூபியுடன் வசித்து வந்து உள்ளார். அப்போது விஷாலுக்கும், ஓம்பிரகாஷ் சிங்கிற்கும் பழக்கம் உண்டானது. இதனால் விஷால் வீட்டிற்கு ஓம்பிரகாஷ் அடிக்கடி சென்று வந்து உள்ளார். இந்த நிலையில் விஷால் வீட்டில் இல்லாத போது அங்கு சென்ற ஓம்பிரகாஷ் காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரூபியை கற்பழித்ததாக தெரிகிறது. மேலும் அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்பின்னர் ரூபிக்கும், ஓம்பிரகாஷ் சிங்கிற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி அறிந்ததும் விஷால், ரூபியை கண்டித்து உள்ளார். அப்போது கற்பழிப்பு வீடியோவை காட்டி ஓம்பிரகாஷ் மிரட்டுவதால் அவருடன் கள்ளக்காதலில் இருப்பதாக விஷாலிடம், ரூபி கூறியுள்ளார். இதற்கிடையே விஷால், ஓம்பிரகாசிடம் இருந்து ரூ.6 லட்சம் வாங்கி இருந்தார். அந்த பணத்தை கேட்டு ஓம்பிரகாஷ் தொந்தரவு கொடுத்ததால் அவரை கொலை செய்ய விஷாலும், ரூபியும் முடிவு செய்தனர். அதன்படி ஓம்பிரகாசை தங்களது வீட்டிற்கு வரவழைத்த விஷால், ரூபியுடன் சேர்ந்து அவரை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு உடலை சாக்கடை கால்வாயில் வீசி சென்றது தெரியவந்தது.

இவ்வாறு போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த குஞ்சாதேவி என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்து உள்ளனர். கைதான 3 பேர் மீதும் காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story