2,700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு 45 மணி நேரத்தில் நோயாளியை சிகிச்சைக்கு அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
2,700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு 45 மணி நேரத்தில் நோயாளியை சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அழைத்து சென்றனர்.
பெங்களூரு: உத்தரபிரதேசம் மாநிலம் முராதாபாத் பகுதியை சேர்ந்தவர் முகமது ஹாசன். இவர் தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே மூடுபித்ரி பகுதியில் தங்கி பாக்கு குடோனில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் விபத்தில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 9 நாட்கள் அங்கு சிகிச்சை பெற்ற அவரை மேல்சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக மங்களூருவில் இருந்து விமானத்தில் அழைத்துச் செல்ல திட்டமிட்டனர்.
ஆனால் விமான டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் மங்களூருவில் இருந்து 2,700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முராதாபாத்திற்கு ஆம்புலன்சில் அழைத்து செல்ல விரும்பினர். இதற்கு முதலில் டாக்டர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். பின்னர் முகமது ஹாசன் குடும்பத்தினரின் வேண்டுகோளை டாக்டர்கள் ஏற்று ஆம்புலன்சில் அனுப்ப தேவையான ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி சூசுகி எக்கோ ஆம்புலன்சில் உயிர் காக்கும் சிகிச்சை கருவிகளுடன் முகமது ஹாசன் அனுப்பி வைக்கப்பட்டார். அந்த ஆம்புலன்சை டிரைவர் அனில் ரூபன் டென்டோன்ஷா, அஸ்வத் ஆகியோர் ஓட்டி சென்றனர். அவர்கள் 2,700 கிலோ மீட்டர் தூரத்தை 45 மணி நேரத்தில் கடந்து முகமது ஹாசனை சரியான நேரத்தில் முராதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.