இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா, ஐரோப்பா தலையிட வேண்டும் - ராகுல் காந்தி பேச்சு; பா.ஜ.க. கண்டனம்
இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என ராகுல் காந்தி பேசியதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நாடு தழுவிய பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கி, தென்மாநிலங்கள், வடமாநிலங்களை கடந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் வரையில் அவரது பயணம் அமைந்தது.
காங்கிரசின் இந்த பாதயாத்திரை கடந்த ஜனவரி இறுதியில் நிறைவடைந்தது. இந்நிலையில், ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் அவர் பேசும்போது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார்.
இதற்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர், லண்டன் நகரில் பேசும்போது, இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என ராகுல் காந்தி பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. இந்தியர்களை ராகுல் காந்தி அவமதிப்பு செய்து விட்டார் என்று கூறி இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளரான ரவி சங்கர் பிரசாத் கூறும்போது, இந்தியாவின் ஜனநாயகம், நாடாளுமன்றம், அரசியல் நடைமுறை மற்றும் நீதிமன்ற நடைமுறை ஆகியவற்றை தனது பேச்சுகளின் வழியே ராகுல் காந்தி கேவலப்படுத்தி இருக்கிறார் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், காங்கிரஸ் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என நீங்கள் உணருகிறீர்களா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நாங்கள் கேட்க விரும்புகிறோம்.
இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என்ற ராகுல் காந்தியின் பொறுப்பற்ற மற்றும் வெட்கக்கேடான பேச்சுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்களா? என கேட்டுள்ள அவர், ராகுல் காந்தியின் விமர்சனங்களை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றால், கட்சி தலைவர் பதவியை தொடர இனியும் விரும்பவில்லை என கூறுங்கள் என்று கூறியுள்ளார்.
சோனியா காந்திஜி அவர்களே, உங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும்படி பா.ஜ.க. உங்களை வலியுறுத்தி கேட்டு கொள்கிறது. உங்களது மகனின் இந்த பொறுப்பற்ற பேச்சுகளின் போது நீங்கள் எங்கே போனீர்கள்? என்று அவர் கேட்டு உள்ளார்.