வீட்டுக்குள் கஞ்சா செடி வளர்த்த அமெரிக்க நாட்டுக்காரர் கைது
பெங்களூருவில் உடற்பயிற்சியாளராக இருந்து கொண்டு வீட்டுக்குள் கஞ்சா செடி வளர்த்த அமெரிக்க நாட்டுக்காரர் போலீசார் கைது செய்தனர்.
பாசைவாடி:-
கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்து விற்பதுடன், வீட்டுக்குள்ளேயே நவீன முறையில் கஞ்சா செடிகளை வளர்த்து விற்பதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பானசவாடி பகுதியில் வசித்து வரும் ஒருவர் தனது வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு எல்.இ.டி. பல்பு உதவியுடன் நவீன முறையில் உயர்ரக கஞ்சா செடிகளை பூந்தொட்டியில் வளர்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் என்பதும், அவர் கடந்த 10 ஆண்டுகளாக பானசவாடி பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்ததுடன், அப்பகுதியில் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் நவீன முறையில் வீடுகளில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததும், அவர் கலப்பின உயர்ரக கஞ்சா செடிகளை வளர்த்ததும், இந்தவகை ஒரு கஞ்சா செடியில் ஒரு கிலோ கஞ்சா உற்பத்தி ஆகும் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து பூந்தொட்டியுடன் கஞ்சா செடி, எல்.இ.டி.பல்புகள், செல்போன் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.