பெண்ணின் வயிற்றில் இருந்த 8½ கிலோ கட்டி அகற்றம்
ஹாவேரி அருகே பெண்ணின் வயிற்றில் இருந்த 8½ கிலோ கட்டி அகற்றி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஹாவேரி-
ஹாவேரி மாவட்டம் சவனூர் தாலுகா பெவினஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 52 வயது பெண். இவர் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹாவேரி அரசு ஆஸ்பத்திரியில் அந்த பெண் ஸ்கேன் எடுத்து பார்த்தார். அப்போது பெண்ணின் வயிற்றில் பெரிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கட்டியை அகற்ற உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும்படி ஹாவேரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறி இருந்தனர். ஆனால் சவனூரில் உள்ள தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் அந்த பெண் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி டாக்டர்கள் ஹிரேகவுடா, வீரேஷ், வீனா, நஷிமா குழுவினர் நேற்று பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்த 8½ கிலோ கட்டியை அகற்றினர். தற்போது அந்த பெண் நலமுடன் உள்ளார்.