கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் உதவித்தொகை
கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
புதுடெல்லி,
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி நேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமும் அடங்கும்.
'பி.எம்.கேர்ஸ் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை' என்ற இந்த திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயல்படுத்துகிறது.
இந்த திட்டப்படி ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதில் மாத படி ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.12 ஆயிரமும், கல்வி உதவித்தொகை ரூ.8 ஆயிரமுமாக மொத்தம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த தொகை 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 3,945 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக மத்திய அரசுக்கு 2022-23-ம் கல்வியாண்டில் ரூ.7.89 கோடி செலவாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.