இன்ஸ்பெக்டர் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்
பெங்களூருவில் பணி இடைநீக்கத்தால் இன்ஸ்பெக்டர் மரணம் அடைந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
இன்ஸ்பெக்டர் மரணம்
பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நந்தீஷ் கடந்த மாதம்(அக்டோபர்) மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார். பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி, இன்ஸ்பெக்டர் நந்தீஸ் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பின்பு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்திருந்தார். அவர், ரூ.80 லட்சம் கொடுத்து பணியில் சேர்ந்ததாக மந்திரி எம்.டி.பி.நாகராஜ் பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இன்ஸ்பெக்டர் நந்தீஷ் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இதுபற்றி டி.ஜி.பி.யிடம் தகவல் பெற்று விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
விசாரணை நடத்தப்படும்
கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தீஷ் மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகங்கள் எழுப்பி உள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் உத்தரவிட்டு இருந்தார். இன்ஸ்பெக்டர் நந்தீஷ் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். இதற்காக தனியாக குழு எதுவும் அமைக்கப்படவில்லை. மரணம் குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளதால் விசாரணை நடத்தப்படும். போலீஸ் துறையில் ஒரே மாவட்டம் மற்றும் ஒரே போலீஸ் நிலையத்தில் கணவன், மனைவி பணியாற்றுவதில் பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த விவகாரம் குறித்து முதல்-மந்திரி மற்றும் போலீஸ் மந்திரி கவனத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் பணி நியமனத்தின் போது பெலகாவியில் ஒருத்தரும், பெங்களூருவில் ஒருத்தரும் நியமிக்கப்படுவார்கள். 35 ஆண்டுகள் தனித்தனியாக பணியாற்ற முடியாது. இந்த பிரச்சினை போலீஸ் துறையில் நீண்ட நாட்களாக இருக்கிறது. அதற்கு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.