சிறுத்தை தாக்கி மூதாட்டி படுகாயம்


சிறுத்தை தாக்கி மூதாட்டி படுகாயம்
x

டி.நரசிப்புராவில் சிறுத்தை தாக்கி மூதாட்டி படுகாயம் அடைந்தார்.

மைசூரு:-

சிறுத்தைகள் அட்டகாசம்

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகாவில் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் தொடர்ந்து சிறுத்தைகள் அட்டகாசம் இருந்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் தாலுகாவில் அடுத்தடுத்து உள்ள ஹொரலஹள்ளி, கன்னநாயக்கனஹள்ளி, எம்.கெப்பேஉண்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 11 வயது சிறுவன் உள்பட 3 பேரை சிறுத்தை வேட்டையாடி கொன்றது. இதையடுத்து ஹொரலஹள்ளி கிராமம் உள்பட 13 இடங்களில் வனத்துறையினர் இரும்பு கூண்டு வைத்திருந்தனர்.

ஹொரலஹள்ளி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் சிறுத்தை ஒன்று சிக்கியிருந்தது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். இதற்கிடையே, பிடிபட்டது ஆட்கொல்லி சிறுத்தையாக என்பது உறுதியாக தெரியவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்த நிலையில் டி.நரசிப்புராவில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் சிறுத்தை தாக்கி மூதாட்டி உயிரிழந்த கன்னநாயக்கனஹள்ளி கிராமத்தில் மற்றொரு மூதாட்டியை சிறுத்தை தாக்கி உள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

மூதாட்டி படுகாயம்

டி.நரசிப்புரா தாலுகா கன்னநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராட்சய்யா. இவரது மனைவி மாதம்மா (வயது 65). இவர் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாதம்மா, அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் அதற்குள் சிறுத்தை அவர் மீது பாய்ந்து கடித்து குதறியது. இதனால் அவர் அலறி கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

அப்போது அந்த சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. சிறுத்தை தாக்கியதில் மாதம்மாவின் கை விரல்கள் துண்டாகின. மேலும் கால் உள்ளிட்ட இடங்களிலும் காயம் அடைந்தார். அவரை அந்தப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் பீதி

இதுகுறித்து தகவல் அறிந்த டி.நரசிப்புரா வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் இதுகுறித்து டி.நரசிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஏற்கனவே மூதாட்டியை கொன்ற சிறுத்தை, மற்றொரு மூதாட்டியை காயப்படுத்தி உள்ளதால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். மேலும், அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று அவர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story