ஆந்திரா: திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி - கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு


ஆந்திரா: திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி  - கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு
x

தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தால் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பதி,

ஆந்திர மாநிலம், கர்னூலில் இருந்து பிரகாசம் மாவட்டம் கோமரோலு மண்டலம் உளவு பாடு பகுதிக்கு 306 கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.

நள்ளிரவு 12 மணியளவில் கர்னூல்-பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்த வாடா என்ற இடத்தில் லாரி சென்று கொண்டு இருந்தபோது லாரியின் பின்பகுதியில் இருந்து திடீரென தீப்பொறி கிளம்பியது. இதனை கண்ட லாரி டிரைவர் மற்றும் கிளீனர் லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடினார். சிறிது நேரத்தில் லாரியில் இருந்த கியாஸ் சிலிண்டர்களுக்கு தீ பரவியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் கியாஸ் சிலிண்டர்கள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் விண்ணை முட்டும் அளவிற்கு தீ பிழம்பு கிளம்பியது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டுகள் இதனை கண்டு அங்கங்கே வாகனங்களை நிறுத்தினர்.

இதுகுறித்து உடனடியாக உளவு பாடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் தீயணைப்பு துறையினரால் லாரியின் அருகே நெருங்க முடியாமல் தவித்தனர். அதற்குள் லாரி முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. வெடித்து சிதறிய கியாஸ் சிலிண்டர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தது.

இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்த கியாஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர். நள்ளிரவு நேரத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் தேசிய நெடுஞ்சாலை 2 பக்கமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.


Next Story