கார் மீது அரசு பஸ் மோதியதில் ஆந்திர தம்பதி, மகள் உடல் நசுங்கி சாவு


கார் மீது அரசு பஸ் மோதியதில் ஆந்திர தம்பதி, மகள் உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஆந்திர தம்பதி, மகளுடன் உடல் நசுங்கி பலியானார்கள். கோவிலுக்கு வந்தவர்களுக்கு இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

மங்களூரு:-

ஆந்திர வியாபாரி

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 40). வியாபாரி. இவரது மனைவி பிரதியுஷா (32). இந்த தம்பதிக்கு 2 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் நாகராஜ் தனது குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் பெல்தங்கடி அருகே தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாத சாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி நேற்று முன்தினம் நாகராஜ், தனது மனைவி, மகளுடன் தர்மஸ்தலாவுக்கு காரில் சென்றிருந்தார். அங்கு சாமிதரிசனம் முடித்துவிட்டு சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

3 பேர் உடல் நசுங்கி பலி

அப்போது உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா நெல்லிக்கெரே பகுதியில் சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ், அவர்களது கார் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி நாகராஜ், அவரது மனைவி பிரதியுஷா, இந்த தம்பதியின் மகள் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

விபத்து நடந்ததும் அங்கேயே அரசு பஸ்ைச நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், சுக்குநூறாக நொறுங்கிய காரில் சிக்கியிருந்த 3 பேரின் உடல்களையும் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். மேலும் 3 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சோகம்

மேலும் விபத்து பற்றி கார்கலா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர். கோவிலுக்கு வந்த இடத்தில் விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story