புனித மண் சேகரிக்கும் ரதம் ஆனேக்கல் வந்தது
கெம்பேகவுடா சிலை நிறுவுவதற்காக புனித மண் சேகரிக்கும் ரதம் ஆனேக்கல் வந்தது என்று கிருஷ்ணப்பா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
ஆனேக்கல்:-
பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகே 108 அடி உயர கெம்பேகவுடா வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 11-ந் தேதி நடக்கிறது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இதன் ஒருபடியாக புனித மண் சேகரிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 223 புண்ணிய இடங்களில் இருந்து இந்த புனித மண் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு ரதமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த ரதம் நேற்று ஆனேக்கல்லுக்கு வந்தது. அந்த ரதத்தை கிருஷ்ணப்பா எம்.எல்.ஏ. வரவேற்றார்.
பின்னர் அவர் பன்னரகட்டாவில் உள்ள சம்பகதாம சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் பன்னரகட்டா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் புனித மண் சேகரிக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். அதையடுத்து அந்த ரதம் பன்னரகட்டா, மண்டபம், கல்லுபாலு, ஹென்னாகரா, ஜிகனி, ஹாரகத்தே, ஹுலிமங்கலா, தொட்டதோகூரு, கோனப்பனஅக்ரஹாரா, கோவிந்தஷெட்டி பாளையா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று புனித மண் சேகரித்தது.