டெல்லியில் பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் அண்ணாமலை சந்திப்பு பரபரப்பு தகவல்கள்
டெல்லியில் பா.ஜனதா மூத்த தலைவர்களை அண்ணாமலை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
டெல்லியில் பா.ஜனதா மூத்த தலைவர்களை அண்ணாமலை சந்தித்து பேசினார்.
தமிழக அரசியலில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி முறிவு தொடர்பாக அவர் கூறிய கருத்து பா.ஜனதாவில் மட்டுமின்றி மாற்றுக்கட்சியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அண்ணாமலையின் இந்த கருத்தில், அவருக்கும், தமிழக பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு தகவல்கள், புகார்கள் டெல்லி தலைமைக்கு வந்துள்ளன.
இதற்கிடையே நேற்று டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநில பா.ஜனதா தலைவர்கள் மாற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக அண்ணாமலை மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
டெல்லி பயணம்
இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அண்ணாமலை நேற்று மதியம் டெல்லி வந்தார். டெல்லியில் கர்நாடக மாநில பா.ஜனதா எம்.பி. தேஜஸ் சூர்யா வீட்டுக்கு வந்த அவர், பின்னர் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரை சந்திப்பதற்காக சென்றார்.
அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மாலை 6 மணி அளவில் அமித்ஷாவை சந்தித்து விட்டதாக தகவல்கள் வந்தன.
இதனைத்தொடர்ந்து மேலும் பல தலைவர்களையும் அண்ணாமலை சந்தித்து பேச இருப்பதாக டெல்லி பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே அண்ணாமலை கர்நாடக சட்டசபை தேர்தல் விஷயங்களுக்காகவே டெல்லி சென்றதாகவும் கூறப்படுகிறது. பா.ஜனதா தலைமை தற்போது கர்நாடக தேர்தல் பணியில் மும்முரமாக உள்ளது.
அங்கு வெற்றிக்கனியை எட்டிப்பறிக்க அந்த மாநிலங்களோடு தொடர்புடையவர்களின் உதவியை நாடும் வகையில் அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து இருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.