காங்கிரசாரின் வாக்குறுதியை மக்கள் நம்ப வேண்டாம்; தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேச்சு
பெண்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற காங்கிரசாரின் வாக்குறுதியை மக்கள் நம்ப வேண்டாம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.
மங்களூரு:
பெண்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற காங்கிரசாரின் வாக்குறுதியை மக்கள் நம்ப வேண்டாம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.
கிராம விகாஸ் யாத்திரை
தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் ராஜேஷ் உலிப்பாடி தலைமையில் கிராம விகாஸ் யாத்திரை நடந்தது. இந்த யாத்திரை கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா பண்ட்வால் தாலுகா பி.சி.ரோட்டில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜனதாவின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பண்ட்வால் டவுன் பகுதியில் கடந்த காலங்களில் வகுப்புவாத கலவரங்கள் ஏற்பட்டது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். கடந்த 4 வருடங்களாக பண்ட்வால் பகுதி அமைதியாக இருக்கிறது. ஏராளமான வளர்ச்சி பணிகளை கண்டுள்ளது. இந்த பகுதி மக்கள் புத்திசாலிகள் என்று பெயர் எடுத்தவர்கள்.
மக்கள் நம்ப வேண்டாம்
பிரியங்கா காந்தி கர்நாடகத்துக்கு வந்தார். அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்படும் என்று கூறினார். இதுபோல் தமிழகத்தில் காங்கிரசும், தி.மு.க.வும் இணைந்து ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்குவோம் என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிவிட்டன. அவர்கள் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்கள் அறிவித்தபடி யாருக்கும் பணம் கொடுக்கவில்லை.
தி.மு.க. பல்வேறு பொய்களை சொல்லி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டது. தமிழகத்தில் தி.மு.க.வும், காங்கிரசும் சொல்லும் பொய்களைப் போல், கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் பொய்களை கூறி வருகின்றது. பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரசார் கூறும் வாக்குறுதிகளை கர்நாடக மக்கள் நம்ப வேண்டாம். மக்கள் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டும்.
பெருவாரியான வாக்குகள்
கர்நாடக காங்கிரஸ் ஏ.டி.எம். போன்றது. அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஏ.டி.எம். செயல்பட தொடங்கி விடும். அந்த ஏ.டி.எம். செயல்பட கர்நாடக மக்கள் அனுமதிக்க கூடாது. கர்நாடகாவில் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பா.ஜனதாவின் தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, ராஜேஷ் உலிப்பாடி எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
முன்னதாக பி.சி.ரோட்டில் இருந்து விழா நடைபெறும் மைதானம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பா.ஜனதா பேரணி நடந்தது. இந்த பேரணியில் திறந்த ஜீப்பில் நின்றபடி அண்ணாமலை வந்தார். அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அண்ணாமலையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கூட்டம் கட்டுக்கடங்கமல் இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.