பயங்கரவாதிகள் சுட்டதில் 4 ராணுவ அதிகாரிகள் மரணம்: காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம்
பயங்கரவாதிகள் சுட்டதில் 4 ராணுவ அதிகாரிகள் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
ஜம்மு,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. பயங்கரவாதிகள் சுட்டதில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று ஜம்மு நகரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடந்தது. பா.ஜ.க., டோக்ரா முன்னணி சிவசேனா மற்றும் யுவ ராஜூத் சபா உள்ளிட்ட அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதோடு, பாகிஸ்தான் கொடிகளை தீயிட்டு கொளுத்தினர்.
ஜி-20 மாநாட்டின் வெற்றிக்கு பிறகு இந்தியா சர்வதேச அளவில் மேலும் பிரபலமடைந்துள்ளதை பாகிஸ்தானால் பொறுத்துக்கொள்ள முடியாததால் அவர்கள் காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க முயல்வதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.