சுதந்திர தினத்தையொட்டி கர்நாடகத்தில் சமூக விரோதிகள் நாசவேலையில் ஈடுபட சதி; மாநில அரசுக்கு, மத்திய உள்துறை எச்சரிக்கை
சுதந்திர தினத்தையொட்டி கர்நாடகத்தில் சமூக விரோதிகள் நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டி உள்ளதாக கர்நாடக அரசுக்கு, மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
பெங்களூரு:
நாசவேலையில் ஈடுபட சதி
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள ஸ்ரீராமபுரம், திலக்நகரில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 2 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு இருந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறி 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி விடுவிடுத்து இருந்தனர். கைதான பயங்கரவாதிகள் 2 பேரும் கர்நாடகத்தில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி கர்நாடகத்தில் சில சமூக விரோதிகள் நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டி உள்ளதாகவும், இதனால் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கர்நாடக அரசுக்கு, மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. கடலோர மாவட்டங்களான உத்தர கன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா ஆகிய இடங்களிலும், பெங்களூரு, பெலகாவி, மைசூரு, குடகு, உப்பள்ளி, சிக்கமகளூரு, சிவமொக்கா ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதேநேரம் சந்தேகத்திற்கு இடமான வகையில் பிடித்து அவர்கள் மீது கழுகு கண் பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விதான சவுதாவுக்கு பாதுகாப்பு
விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் தங்க உள்ள இடம், அவர்கள் வந்ததற்கான காரணம் குறித்தும் தகவல்களை பெற்று கொள்ள வேண்டும் எனவும் உள்துறை கூறியுள்ளது. மேலும் பெங்களூருவில் உள்ள விதான சவுதா, விகாச சவுதா, முதல்-மந்திரியின் வீடு, ராஜ்பவன், பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம், மெஜஸ்டிக் பஸ் நிலையம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள், கே.ஆர்.எஸ்., துங்கபத்ரா உள்ளிட்ட அணைகள், வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும்படியும் மாநில அரசுக்கு, உள்துறை உத்தரவிட்டு உள்ளது.
மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்து உள்ள நிலையில் கர்நாடகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். அப்போது பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித குறைபாடும் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏதேனும் தவறு நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்தார்.