4 ஐகோர்ட்டுகளுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்
4 ஐகோர்ட்டுகளுக்கு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர், சில நாட்களில் ஓய்வு பெறுகிறார்கள்.
புதுடெல்லி,
குஜராத், திரிபுரா, கவுகாத்தி, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 4 ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருந்தன. அந்த பதவிகளுக்கு 4 நீதிபதிகள் பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு 'கொலீஜியம்' சிபாரிசு செய்தது. அதை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தது.
இந்தநிலையில், நேற்று 4 ஐகோர்ட்டுகளுக்கும் தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். குஜராத் ஐகோர்ட்டின் மிக மூத்த நீதிபதியான சோனியா கிரிதர் கோகனி, அதே ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பதவி ஏற்ற பிறகு, நாட்டில் பதவியில் உள்ள ஒரே பெண் தலைமை நீதிபதியாக இருப்பார்.
நீதிபதி சோனியா கிரிதர் கோகனிக்கு இம்மாதம் 25-ந் தேதியுடன் 62 வயது பூர்த்தி அடைவதால், அன்று ஓய்வு பெறுகிறார். எனவே, சில நாட்கள் மட்டுமே அவர் இப்பதவியில் இருப்பார்.
குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த அரவிந்த குமார், கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டதால், உடனடியாக அந்த இடத்தை நிரப்புமாறு 'கொலீஜியம்' கேட்டுக்கொண்டது. அதனால், நீதிபதி சோனியா கிரிதா் கோகனி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசா ஐகோர்ட்டின் மிக மூத்த நீதிபதி ஜஸ்வந்த் சிங், திரிபுரா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இம்மாதம் 22-ந் தேதி ஓய்வு பெறுகிறார்.
ராஜஸ்தான் ஐகோர்ட்டு நீதிபதி சந்தீப் மேத்தா, கவுகாத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கவுகாத்தி ஐகோர்ட்டு நீதிபதி என்.கோடீஸ்வர சிங், காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.