உணவு சரியில்லை, விலை அதிகம் என வாக்குவாதம்; வாடிக்கையாளர் மேல் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய உணவக உரிமையாளர்
ஒடிசாவில் உணவு சரியில்லை, விலையும் அதிகம் என வாக்குவாதம் செய்த வாடிக்கையாளர் மேல் உணவக உரிமையாளர் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
ஜஜ்பூர்,
ஒடிசாவின் கட்டாக் நகரில் இருந்து 45 கி.மீ. வடகிழக்கே ஜஜ்பூர் மாவட்டத்தில் பாலிசந்திரப்பூர் கிராமத்தில், வசித்து வருபவர் பிரசன்ஜித் பரீடா. இவர் உள்ளூர் சந்தையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சாப்பிட சென்றுள்ளார்.
ஆனால், தனக்கு வழங்கப்பட்ட உணவு சுவையாக இல்லை என உணவக உரிமையாளர் பிரவாகர் சாஹூவிடம் முறையிட்டு உள்ளார். இதன்பின்பு, பரீடா சாப்பிட்டு முடித்த பின்னர், உணவின் விலை பற்றி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
ஏற்கனவே, உணவு சரியில்லை என கூறியதற்காக ஆத்திரத்தில் இருந்த சாஹூ, இதனால் மீண்டும் கோபமடைந்து உள்ளார். இதனால், திடீரென கொதிக்கும் எண்ணெய்யை பரீடாவின் மீது ஊற்றியுள்ளார்.
இந்த சம்பவத்தில் பரீடாவின் முகம், கழுத்து, மார்பு, வயிறு மற்றும் கைகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
இதனை தொடர்ந்து அவர் உடனடியாக கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.