ஆட்கொல்லி புலியை பிடிக்க சென்ற அர்ஜுனா யானை மீண்டும் மைசூருவுக்கு வந்தது
ஆட்கொல்லி புலியை பிடிக்க சென்ற அர்ஜுனா யானை மீண்டும் மைசூரு வந்தது.
மைசூரு
தசரா விழா
மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் தசரா விழாவை காண வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் குவிவார்கள். இந்தநிலையில், இந்த ஆண்டு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி தொடங்கி 24- ந்தேதி வரை நடக்கிறது.
விழாவில் 14 தசரா யானைகள் கலந்து கொள்கின்றன. இந்தநிலையில் முதல் கட்டமாக 9 யானைகள் கடந்த 5-ந் தேதி உன்சூர் வனப்பகுதியில் இருந்து மைசூரு அரண்மனை வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அங்கு யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அர்ஜுனா என்ற யானை எச்.டி.கோட்டை தாலுகாவில் ஆட்கொல்லி புலியை பிடிக்க சென்றது.
யானைகளுக்கு ஓய்வு
இந்தநிலையில் நேற்று அமாவாசை என்பதால் யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் யானைகள் நடைபயிற்சிக்கு செல்லவில்லை. அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக செட்டுகளில் யானைகள் ஓய்வெடுத்தன. மேலும் யானைகளை பாகன்கள் தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டினர்.
அப்போது யானைகள் ஆனந்த குளியல் போட்டன. இந்தநிலையில் எச்.டி.கோட்டை தாலுகாவிற்கு ஆட்கொல்லி புலியை பிடிக்க சென்ற அர்ஜுனா யானையை லாரி மூலமாக மீண்டும் வனத்துறையினர் அரண்மனை வளாகத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது அங்கு இருந்த யானைகளை பார்த்து அர்ஜுனா யானை உற்சாகம் அடைந்தது.
சிறப்பு பூஜை
அரண்மனை மண்டலி சார்பில் அர்ஜுனா யானைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வந்த முதல் நாளே நடைபயிற்சி இல்லாமல் அர்ஜுனா யானை ஓய்வு எடுத்தது. தசரா விழாவிற்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் ஆட்கொல்லி புலியை பிடிக்க சென்ற அர்ஜுனா யானையை பயிற்சி அளிக்க அரண்மனை வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்வதில்லை.
யானைகளை மற்ற நாட்களில் நடைபயிற்சி, ஆலமரத்தின் இலைகளை பறித்து அழைத்து செல்வது, காரஞ்சி ஏரி குளத்தின் நீரில் விளையாட விடுவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். மைசூரு அரண்மனையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் வளாகத்தில் உள்ள யானைகளை புகைப்படம் எடுக்கிறார்கள்.
மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யானைகளிடம் ஆசி பெற்று செல்கிறார்கள்.