சாலையில் ஆணிகளை போட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது
தத்தா ஜெயந்தி ஊர்வலத்தில் சாலையில் ஆணிகளை போட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிக்கமகளூரு கோர்ட்டில் சரண் அடைந்தார்.
சிக்கமகளூரு:
தத்தா ஜெயந்தி ஊர்வலத்தில் சாலையில் ஆணிகளை போட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிக்கமகளூரு கோர்ட்டில் சரண் அடைந்தார்.
தத்தா ஜெயந்தி
சிக்கமகளூரு மாவட்டம் சந்திர திரிகோண மலையில் பாபாபுடன்கிரி மலையில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 3 நாட்கள் தத்தா ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி கடந்த 6-ந்தேதி சிக்கமகளூரு நகரில் ஷோபா ஜெயந்தி விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு சிக்கமகளூரு நகரில் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, சந்திர திரிகோண மலைக்கு செல்லும் வழியில் கைமரம் பகுதியில் சாலையில் ஆணிகள் கிடந்தது. சந்திர திரிகோண மலைக்கு இந்து அமைப்பினர் சென்ற 5 வாகனங்கள் பஞ்சரானது. இதையடுத்து அந்த ஆணிகள் அகற்றப்பட்டது. இந்த நிலையில், ஷோபா ஜெயந்தி ஊர்வலத்தை சீர்குலைக்க மர்மநபர்கள் சாலையில் ஆணிகளை கொட்டியது தெரியவந்தது.
கோர்ட்டில் சரண்
இதுகுறித்து சிக்கமகளூரு போலீசில் இந்து அமைப்பினர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தத்தா ஜெயந்தி ஊர்வலத்தை சீர்குலைக்க சாலையோரம் ஆணிகளை கொட்டியதாக முகமது சபாஜ், வாகித் உசேன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், கைமரம் பகுதியில் சாலையோரம் ஆணிகளை கொட்டியதாக கவுரிகால்வே பகுதியை சேர்ந்த அஜாம் பாஷா (வயது 22) என்பவர் சிக்கமகளூரு கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.