தொழிலாளியை கொன்றதாக மனைவி, கொழுந்தனுடன் கைது உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் தீர்த்துக்கட்டினர்
ராமநகர் அருகே, தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கில் மனைவி, கொழுந்தனுடன் கைது செய்யப்பட்டார். உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் அவர்கள், தொழிலாளியை தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு: ராமநகர் அருகே, தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கில் மனைவி, கொழுந்தனுடன் கைது செய்யப்பட்டார். உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் அவர்கள், தொழிலாளியை தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
உல்லாசமாக இருந்தனர்
ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா சாத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜோதிநகர் பகுதியில் வசித்து வந்தவர் ஜெபமாலை(வயது 40). இவரது மனைவி மேரி(32). ஜெபமாலை பெங்களூருவில் கூலி வேலை செய்து வந்தார். இதனால் மேரி மட்டும் வீட்டில் தனியாக வசித்தார். இந்த நிலையில் மேரிக்கும், ஜெபமாலையின் சகோதரரான அந்தோணி(37) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு இருந்தது. அவர்கள் 2 பேரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து ஜோதிநகருக்கு ஜெபமாலை சென்றார். அப்போது வீட்டில் மேரியும், அந்தோணியும் உல்லாசமாக இருந்து உள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெபமாலை, மேரி மற்றும் அந்தோணியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த மேரியும், அந்தோணியும் சேர்ந்து ஜெபமாலையை இரும்பு கம்பியால் அடித்து உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்தார். பின்னர் ஜெபமாலையின் உடலை 2 பேரும் சேர்ந்து தூக்கில் தொங்க விட்டு உள்ளனர்.
மனைவி கைது
இதன்பின்னர் குடும்ப தகராறில் ஜெபமாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளனர். பின்னர் போலீசாருக்கு தெரியாமல் ஜெபமாலையின் உடலை அடக்கம் செய்யவும் முயன்று உள்ளனர். இதுபற்றி அறிந்ததும் சாத்தனூர் போலீசார் விரைந்து சென்று ஜெபமாலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜெபமாலையை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மேரி, அந்தோணியை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்து தகராறு செய்ததால் ஜெபமாலையை கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடியதை 2 பேரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மேரி, அந்தோணியை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.