அருணாச்சல பிரதேசம்: 3 மாவட்டங்களில் ஆயுதப்படை சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அக்டோபர் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 30 வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் குழுக்களில் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான , நாகலாந்து ,அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை (சிறப்பு அதிகார) சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள திராப், சாங்லாங் மற்றும் லாங்டிங் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் மத்திய அரசின் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அக்டோபர் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 30 வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நம்சாய் மற்றும் மகாதேவ்பூர் காவல் நிலையங்களின் எல்லைக்குள் வரும் பகுதிகளிலும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த 3 மாவட்டங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் தற்போது மேலும் 6 மாதம் நீட்டிக்கப்ட்டுள்ளது.அருணாச்சல பிரதேசத்தின் இந்த மாவட்டங்களின் பாதுகாப்பை ஆய்வு செய்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் அமலில் உள்ள இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படும். சந்தேகப்படும் நபர்களை கைது செய்யவும், விசாரணை நடத்தவும், சோதனை நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.