"காங்கிரஸைப் பலவீனப்படுத்த ராகுல் காந்தி போதாதா?"- அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டல்
காங்கிரஸைப் பலவீனப்படுத்த ராகுல் காந்தி போதாதா? என கெஜ்ரிவால் கிண்டலாக பேசியுள்ளார்.
புதுடெல்லி,
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முழுவீச்சில் பிரச்சாரம் செய்து வருகிறார். குஜராத்தில் மட்டுமில்லாது சமீப காலமாக நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் கெஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார்.
அதே வேளையில் ஆம் ஆத்மி கட்சியானது பாஜகவை எதிர்ப்பதை விட காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்துவதாகக் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் ஆங்கில ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கெஜ்ரிவால் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய கெஜ்ரிவால் கூறுகையில் "வெளிப்படையாகச் சொல்லுங்கள். காங்கிரஸைப் பலவீனப்படுத்த நான் தேவையா? ராகுல் காந்தி போதாதா? ராகுல் காந்தி இப்போது பாத யாத்திரை செல்கிறார். எல்லோரும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்" என கிண்டலாக தெரிவித்துள்ளார்.