மக்கள் ஆதரவு இருக்கும் வரை என்னை யாராலும் ஒழிக்க முடியாது; சித்தராமையா பேச்சு
மக்கள் ஆதரவு இருக்கும் வரை என்னை யாராலும் ஒழிக்க முடியாது என்று சித்தராமையா கூறியுள்ளார்.
கதக்:
மதவாத அரசு
காங்கிரஸ் கட்சியின் மக்கள் குரல் பொதுக்கூட்டம் கதக்கில் நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-
கர்நாடகத்தில் பெரும் ஊழல், மதவாத அரசு உள்ளது. பா.ஜனதாவால் அடிமட்டத்தில் உள்ள சமூகங்களுக்கு நல்லது நடக்காது. ஆபரேஷன் தாமரை மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி சட்டவிரோதமாக பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. பெட்ரோலிய பொருட்கள் விலை, சிமெண்டு உள்பட கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது.
ஒழிக்க முடியாது
திப்பு சுல்தானை போல் சித்தராமையா கொல்ல வேண்டும் என்று மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார். இத்தகைய பா.ஜனதா கட்சிக்கு நீங்கள் ஓட்டு போட வேண்டுமா?. மக்களின் ஆதரவு உள்ள வரை என்னை யாராலும் ஒழிக்க முடியாது. அஸ்வத் நாராயண் பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது விவசாய கடன்களை தள்ளுபடி செய்தேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்குவதாக நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம். இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.