தங்க நகை ஆசாரி சயனைடு தின்று தற்கொலை
சிவமொக்காவில் தங்க நகை ஆசாரி ஒருவர் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவமொக்கா:-
தங்க நகை ஆசாரி
சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாலேசரா கிராமத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி(வயது 43). தங்க நகை ஆசாரியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக பெலகாவி மாவட்டம் சகாப்புராவில் தங்க நகை செய்யும் பட்டரை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சஹாபுராவில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற குருமூர்த்தி, வீடு திரும்பவில்லை. மனைவி மற்றும் உறவினர்கள் அவரை தேடி அலைந்தனர்.
ஆனால் குருமூர்த்தி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சகாப்புரா போலீசில் குருமூர்த்தியின் மனைவி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குருமூர்த்தியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் குருமூர்த்தி பாலேசாரா கிராமத்தில் உள்ள வீட்டில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.
சயனைடு தின்று தற்கொலை
இதுகுறித்து சிவமொக்கா ரிப்பன்ேபட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குருமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தினர்.
அதில் குருமூர்த்தி சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரியவந்தது. ஆனால் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. தொழிலில் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டதால் குருமூர்த்தி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து ரிப்பன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.