மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரி பதவியில் இருந்து அசோக் விடுவிப்பு


மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரி பதவியில் இருந்து அசோக் விடுவிப்பு
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா பிரமுகர்கள் எதிர்ப்பு காரணமாக மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரியில் இருந்து அசோக் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கோபாலய்யா மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

பெங்களூரு:

அசோக்கிற்கு எதிர்ப்பு

கர்நாடகத்தில் மே மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடைபெற சாத்தியம் உள்ளது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக பழைய மைசூரு பகுதிகளில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே மீண்டும் ஆட்சி அமைக்க முடிவும் என்ற நிலை பா.ஜனதாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூரு, மண்டியா, ராமநகர், குடகு, துமகூரு, கோலார் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சியை வளர்க்க தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக மண்டியா மாவட்டத்தில் ஒக்கலிக சமுதாயத்தினர் அதிகளவில் வசிப்பதால், அந்த சமுதாயத்தை சேர்ந்த மந்திரியான கோபாலய்யா மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டு இருந்தார். சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக திடீரென்று கோபாலய்யா மாற்றப்பட்டு, அதே சமுதாயத்தை சேர்ந்த வருவாய்த்துறை மந்திரி அசோக் மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டார். இதற்கு மண்டியா மாவட்ட பா.ஜனதா பிரமுகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

மண்டியா பொறுப்பு மந்திரி விடுவிப்பு

மாவட்ட பொறுப்பு மந்திரி பதவியை அசோக்கிடம் இருந்து பறிக்க வேண்டும், மண்டியாவில் இருந்து அசோக் திரும்ப செல்ல வேண்டும் என்ற போஸ்டர்களும் ஒட்டப்பட்டது. அசோக்கிற்கு மண்டியா பா.ஜனதாவினரே எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை மாற்றுவதற்கு பா.ஜனதா தலைமை ஆலோசித்து வந்தது. இந்த நிலையில், மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து அசோக் தெரிவித்தார்.

இதையடுத்து, மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரியில் இருந்து அசோக்கை விடுவிப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். மந்திரி அசோக் கேட்டு கொண்டதன் பேரில், அவரை மாவட்ட பொறுப்பு மந்திரி பதவியில் இருந்து விடுவித்திருப்பதாகவும், கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து கூடிய விரைவில் புதிய மாவட்ட பொறுப்பு மந்திரி நியமிக்கப்படுவார் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கோபாலய்யாவுக்கு மீண்டும் வாய்ப்பு

மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரி பதவியில் இருந்து அசோக் விடுவிக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு பதிலாக மந்திரிகளான கோபாலய்யா, நாராயணகவுடா, அஸ்வத் நாராயண் ஆகிய 3 பேரில் ஒருவருக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கோபாலய்யா ஏற்கனவே மண்டியா பொறுப்பு மந்திரியாக இருந்த அனுபவம் இருப்பதால், அவருக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பு மந்திரி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் ராமநகர் மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருக்கும் அஸ்வத் நாராயண், டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேசுக்கு எதிராக ராமநகரில் பா.ஜனதாவை வளர்த்து வருவதால், மண்டியாவில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக தலைவர்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக அஸ்வத் நாராயண் செயல்படுவார் என்பதால், அவருக்கும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Next Story