அசாம்: பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்த 1,561 இளைஞர்கள்; 8,000 பேர் சரண்
அசாமில் 6 ஆண்டுகளில் 1,561 இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்துள்ளனர் என முதல்-மந்திரி சட்டசபையில் இன்று கூறியுள்ளார்.
கவுகாத்தி,
அசாம் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தேவவிரத சாய்கியா எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், 2016-ம் ஆண்டில் இருந்து இதுவரை அசாமில் மொத்தம் 1,561 இளைஞர்கள், 5 வெவ்வேறு பயங்கரவாத அமைப்புகளில் இணைந்துள்ளனர்.
அவர்களில் 811 பேர் என்.டி.எப்.பி. இயக்கத்திலும், 164 பேர் என்.எல்.எப்.பி. (போடோ) இயக்கத்திலும், 351 பேர் பி.டி.சி.கே. இயக்கத்திலும், 203 பேர் உல்பா இயக்கத்திலும் மற்றும் 32 பேர் யூ.பி.ஆர்.எப். இயக்கத்திலும் இணைந்துள்ளனர் என கூறியுள்ளார்.
இதேபோன்று, ஏறக்குறைய 8 ஆயிரம் பேர் வரை சரணடைந்து உள்ளனர். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2016-ம் ஆண்டுக்கு பின்பு ஜிகாதி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக மொத்தம் 84 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என அவர் தெரிவித்து உள்ளார்.