அசாம்; 1 லிட்டருக்கு குறைவான கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை
அக்டோபர் 2ஆம் தேதி முதல் 1 லிட்டருக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை விதித்து அசாம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கவுகாத்தி,
அசாம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் 1 லிட்டர் கொள்ளளவுக்கு குறைவான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் தடை விதித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம், அசாம் அரசு இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் 1 லிட்டருக்கும் குறைவான பாலிஎதிலின் டெரிப்தாலேட்டால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தடை செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் இந்த தடை சட்டத்தை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
அதன்படி 1 லிட்டர் கொள்ளளவுக்கு குறைவான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துதல், உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், இருப்பு வைப்பது, விநியோகம் செய்தல், விற்பனை செய்வது போன்றவற்றை தடை செய்து அசாம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணமாக, 1 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் பாட்டில்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் மாசுபடுத்தும் திறன் பெரிய அளவிலான கொள்ளளவு கொண்ட குடிநீர் பாட்டில்களை விட அதிகமாக உள்ளது அதனால் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.