சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியா?
வருகிற சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து சித்தராமையா கருத்து கூறியுள்ளார்.
பாகல்கோட்டை:-
எங்கும் கூறவில்லை
கர்நாடக சட்டசபை தேர்தலில் கோலாரில் போட்டியிட போவதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து சித்தராமையா பாகல்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வருகிற சட்டசபை தேர்தலில் நான் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட முடிவு செய்துள்ளேன். 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக நான் எங்கும் கூறவில்லை. நான் கடந்த முறை பாதாமி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அங்கு நான் குறிப்பிடத்தக்க அளவில் பல்வேறு பணிகளை செய்து முடித்துள்ளேன். நான் நாடோடி போல் தொகுதியை தேடிக்கொண்டு அலைவதாக எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். சாமுண்டீஸ்வரி தொகுதியில் 8 முறை போட்டியிட்டேன்.
விமர்சனம் செய்கிறார்கள்
அந்த தொகுதி பிரிக்கப்பட்டபோது, எனது சொந்த கிராமம் உள்ளிட்ட பகுதிகள் வருணா தொகுதியில் சேர்ந்தது. அதனால் நான் வருணா தொகுதியில் 2 முறை போட்டியிட்டேன். கடந்த முறை சாமுண்டீஸ்வரி தொகுதியில் நின்றேன். அதனால் நான் நாடோடி அல்ல. பாதாமி தொகுதி தூரமாக உள்ளது. அதனால்
பெங்களூருவுக்கு அருகில் உள்ள கோலாரில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
கடந்த 1991-ம் ஆண்டு கொப்பல் தொகுதியில் போட்டியிட்டேன். அப்போது ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். அதனால் நான் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். அந்த சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால், நான் வெற்றி பெற்று இருப்பேன். எதிர்க்கட்சிகளில் உள்ளவர்கள் என்னை விமர்சனம் செய்கிறார்கள். கருத்து சுதந்திரம் உள்ளதால் அவர்களின் கருத்துகளை கூறுகிறார்கள்.
லஞ்ச பேரங்கள்
பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., எடியூரப்பா வீட்டில் லஞ்ச பேரங்கள் நடப்பதாகவும், அவரது மகனுக்கு சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகவும் கூறினார். அவர் மீது பா.ஜனதா மேலிடம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. பா.ஜனதா கட்டுப்பாடான கட்சி என்கிறார்கள். இது தான் பா.ஜனதா கட்டுப்பாட்டுடன் செயல்படும் தன்மையா?.
அவர் மீது நடவடிக்கை எடுத்தால், இன்னும் ஊழல் விவகாரங்களை அம்பலப்படுத்துவார் என்று பா.ஜனதா தலைவர்களுக்கு பயம். தலித் சமூகத்தில் உள் இடஒதுக்கீட்டை நான் ஆதரிக்கிறேன். இதுகுறித்து சதாசிவா ஆணைய அறிக்கையை காங்கிரஸ் ஏற்று கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெறும். குறைந்தபட்சம் 130 இடங்களை கைப்பற்றுவோம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.