சிக்பள்ளாப்பூரில் உதவி சப்-இன்ஸ்ெபக்டர் ஸ்கூட்டருக்கு தீ வைப்பு
சிக்பள்ளாப்பூரில் உதவி சப்-இன்ஸ்ெபக்டர் ஸ்கூட்டருக்கு தீ வைத்துவிட்டு தலைமறைவான வியாபாரியை போலீசாா் வலைவீசி தேடிவருகின்றனா்.
சிக்பள்ளாப்பூர்
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டேவை அடுத்த விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் கலிமுல்லா. பழ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக கலிமுல்லாவிற்கும், அவரது சகோதரருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கலிமுல்லா சகோதரரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் சுதாரித்து கொண்ட சகோதரர் கலிமுல்லாவை தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த கலிமுல்லாவை உறவினர்கள், ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கலிமுல்லா கூச்சலிட்டப்படி ஆஸ்பத்திரியில் ரகளையில் ஈடுபட்டார். இதனால் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு குடிபண்டேவை சேர்ந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் நஞ்சுண்டசர்மா சென்று கலிமுல்லாவை எச்சரித்தார்.
இருப்பினும் கலிமுல்லா கேட்கவில்லை. மீண்டும் வீட்டிற்கு ெசன்று சகோதரனின் காரை அடித்து நொறுக்கினர். இதையடுத்து உதவி சப்-இன்ஸ்பெக்டர் நஞ்சுண்டேசர்மா, வீட்டிற்கு சென்று கலிமுல்லாவை எச்சரித்தார். இதனால் கோபமடைந்த கலிமுல்லா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் நஞ்சுண்டேசர்மாவை பின்தொடர்ந்து சென்றனார்.
பின்னர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த நஞ்சுண்டசர்மாவின் ஸ்கூட்டருக்கு தீ வைத்து எரித்துள்ளார். இதை அறிந்த நஞ்சுண்டசர்மா உடனே குடிபண்டே போலீசாருக்கு தகவல் அளித்தார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் இதுகுறித்து நஞ்சுண்டேசர்மா குடிபண்டே போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான கலிமுல்லாவை வலைவீசி தேடி வருகின்றனர்.