சித்தாப்புரா கிராமத்தில் காபித்தோட்டத்தில் தஞ்சம் அடைந்த 3 காட்டுயானைகள்


சித்தாப்புரா கிராமத்தில் காபித்தோட்டத்தில் தஞ்சம் அடைந்த 3 காட்டுயானைகள்
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சித்தாப்புரா கிராமத்தில் வீட்டை சேதப்படுத்திவிட்டு காபித்தோட்டத்தில் தஞ்சம் அடைந்த 3 காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

குடகு-

சித்தாப்புரா கிராமத்தில் வீட்டை சேதப்படுத்திவிட்டு காபித்தோட்டத்தில் தஞ்சம் அடைந்த 3 காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

காட்டுயானை

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்டது சித்தாப்புரா கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் வெளியேறி இந்த கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டுயானை வெளியேறியது. அந்த காட்டுயானை சித்தாப்புரா கிராமத்திற்குள் புகுந்தது.

கிராமத்தில் உள்ள சாலைகளில் வலம் வந்த அந்த காட்டுயானை, பின்னர் அங்குள்ள பஸ் நிறுத்தத்தை நோக்கி ஓடியது. காட்டுயானை ஆக்ரோஷத்துடன் வருவதைப் பார்த்த பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடி உயிர் தப்பினர்.

வீடு சேதம்

பின்னர் அங்கு இருந்த மின்கம்பங்களை முறித்து காட்டுயானை சேதப்படுத்தியது. இதனால் சித்தாப்புரா கிராமத்தில் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் கரடிகோடு சாலையில் ஜலீல் என்ற டிரைவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வந்தார். அந்த சந்தர்ப்பத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மேலும் 2 காட்டுயானைகள் அங்கு வந்தன. அந்த காட்டுயானைகளை பார்த்த ஆட்டோ டிரைவர் உடனடியாக ஆட்டோவை அங்கிருந்து திருப்பி ஓட்டிச்சென்று உயிர் தப்பினார்.

பின்னர் அந்த காட்டுயானைகள் சித்தாப்புரா கிராம பஞ்சாயத்து அலுவலக காம்பவுண்டு சுவர், அப்பகுதியில் வசித்து வரும் முஸ்தபா என்பவரது வீடு ஆகியவற்றை சேதப்படுத்தின. இந்த சந்தர்ப்பத்தில் முஸ்தபா மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து பின்வாசல் வழியாக வெளியே ஓடி உயிர்தப்பினர்.

கிராம மக்கள் பீதி

பின்னர் அங்குள்ள சாலை வழியாக காபித்தோட்டத்திற்குள் 3 காட்டுயானைகளும் புகுந்தன. பின்னர் அங்கேயே விடிய, விடிய காட்டுயானைகள் தஞ்சம் அடைந்தன. இதை அங்கிருந்த சில வாலிபர்கள் செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே காபித்தோட்டங்களில் காட்டுயானைகள் தஞ்சம் அடைந்திருப்பது குறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த காட்டுயானைகளை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். காட்டுயானைகளின் அட்டகாசத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.


Next Story