ஷராவதி நீர் மின் நிலையத்தில் பாதுகாப்பு பிரிவு அதிகாரி, போலீசார் இடையே மோதல்
ஷராவதி நீர்மின் நிலையத்தில் பாதுகாப்பு பிரிவு அதிகாரி மற்றும் போலீசாருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
சிவமொக்கா;
மோதல்
சிவமொக்கா மாவட்டம் கார்கல் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஷராவதி நீர் மின் நிலையத்தின் வாடன் பைலு சர்ஜ் டேங்க் பாதுகாப்பு கேட் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருபவர் சிவக்குமார். இவர் கே.பி.சி. பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர். நேற்று முன்தினம் இவர் பணியில் இருந்தபோது, கார்கல் போலீஸ் நிலையத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் திருமல்லேஷ், சர்ஜ் டேங்க் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் அந்த கேட்டின் உள்ளே நுழைய முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்த கே.பி.சி பாதுகாப்பு பிரிவு அதிகாரி சிவக்குமார், திருமல்லேஷை தடுத்து நிறுத்தி, நுழைவு அனுமதி சீட்டு இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு திருமல்லேஷ் இதன் உள்ளே நுழைவதற்கு எதற்காக அனுமதி சீட்டு வேண்டும் என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
கேமரா காட்சிகள் வைரல்
இந்த காட்சிகள் ஷராவதி நீர் மின் நிலையங்களில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இந்த வீடியோ கே.பி.சி. பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுபாட்டை மீறி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கும், போலீசாருக்கு இடையே எந்நேரம் வேண்டும் என்றாலும் மோதல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே உயர் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.