ராஜஸ்தானில் கொடூரம்; தாயுடன் வார்டில் இருந்த ஒரு மாத குழந்தையை இழுத்து சென்று, கொன்ற தெரு நாய்கள்


ராஜஸ்தானில் கொடூரம்; தாயுடன் வார்டில் இருந்த ஒரு மாத குழந்தையை இழுத்து சென்று, கொன்ற தெரு நாய்கள்
x

ராஜஸ்தானில் தாயுடன் மருத்துவமனை வார்டில் படுத்து இருந்த ஒரு மாத குழந்தையை தெரு நாய்கள் இழுத்து சென்று, கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.



சிரோஹி,


ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் ஜவாய்பந்த் பகுதியை சேர்ந்தவர் மகேந்திர குமார். உடல்நல குறைவுக்காக சிரோஹி மாவட்ட அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்து உள்ளார்.

இதனால், அவரது மனைவி ரேகா மற்றும் அந்த தம்பதியின் ஒரு மாத ஆண் குழந்தை உள்பட 3 குழந்தைகள் அந்த மருத்துவமனையின் வார்டிலேயே தங்கி உள்ளனர். நேற்று இரவு ஒன்றாக தூங்கி உள்ளனர்.

இந்நிலையில், தாயுடன் வார்டில் படுத்து இருந்த ஒரு மாத குழந்தையை, திடீரென வார்டுக்குள் நேற்றிரவு நுழைந்த 3 தெரு நாய்கள் இழுத்து சென்று உள்ளன. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு மற்ற வார்டில் இருந்தவர்கள் எழுந்து உள்ளனர்.

அவர்கள் அனைவரும் குழந்தையை நாய்கள் இழுத்து செல்லும் காட்சியை கண்டு அதிர்ச்சியுற்றனர். அவர்கள் தெரு நாய்களை விரட்ட முயற்சித்து உள்ளனர். அவற்றை அச்சுறுத்தியும் உள்ளனர்.

ஆனால், குழந்தையை நாய்கள் இழுத்து சென்று விட்டன. நாய்கள் தாக்கியதில் குழந்தையின் கால், முகம் மற்றும் கை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் குழந்தை உயிரிழந்து விட்டது. மருத்துவமனை வளாகத்தில் இரவில் தெரு நாய்கள் சுற்றி திரிந்தது நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் இடையே மனதளவில் பயம் ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொத்வாலி காவல் நிலைய போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் இதுபோன்ற அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்து உள்ளது.


Next Story