கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்: 6 மாநில அரசுகளிடம் விவரங்களை சேகரிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான தாக்குதலை தடுக்கக்கோரிய வழக்கில் 6 மாநில அரசுகளிடம் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான தாக்குதலை தடுக்க கோரி பெங்களூரு மறைமாவட்ட பேராயர் பீட்டர் மஷாடோ மற்றும் தேசிய ஒருமைப்பாடு மன்றத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் கொலின் கன்சால்வேஸ் ஆஜராகி, 'நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது. பிரார்த்தனை கூட்டங்களுக்கு தடை ஏற்படுத்தப்படுகிறது. இதற்கான தரவுகளை மனித உரிமை அமைப்புகள் அளித்துள்ளன' என வாதிட்டார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மறுத்தார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான தாக்குதல் தொடர்பான விவரங்களை பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா மாநில அரசுகளிடம் இருந்து சேகரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது.
மேலும் தாக்குதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கைது, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை பற்றிய விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அளிக்க மேற்கண்ட மாநிலங்களுக்கு 2 மாதம் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.