மத்திய பிரதேசத்தில் மூதாட்டி மற்றும் பேரன் மீது தாக்குதல்: 6 ரெயில்வே போலீசார் சஸ்பெண்ட்
மத்திய பிரதேசத்தில் மூதாட்டி மற்றும் பேரன் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 6 ரெயில்வே போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் காத்னி மாவட்டத்தில் உள்ள ரெயில்வே காவல் நிலையத்தில் ஒரு மூதாட்டி மற்றும் அவரது பேரனான 15 வயது சிறுவன் மீது ரெயில்வே போலீசார் சரமாரியாக தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது. மேலும் அந்த பதிவில், "மத்திய பிரதேசத்தில் என்ன நடக்கிறது? சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதாக கூறி, முதல்-மந்திரி மோகன் யாதவ் அரசின் காவல்துறையினர் ரவுடித்தனத்தில் ஈடுபடுகின்றனர்.
தலித் குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டி மற்றும் 15 வயது சிறுவனை காத்னி அரசு ரெயில்வே காவல் நிலைய பொறுப்பாளர் உள்ளிட்டோர் கொடூரமாக தாக்கிய சம்பவம் வேதனை அளிக்கிறது. அவர்களுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது? அரசின் அலட்சியம்தான் இதற்கு காரணமா? இதுபோன்ற செயல்களில் ஈடுபட அவர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதா?" என்று பதிவிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், "காத்னி அரசு ரெயில்வெ காவல் நிலைய போலீசார் தொடர்பான பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ரெயில்வே டி.ஐ.ஜி.யை சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டேன். முதற்கட்ட விசாரணையின்படி, சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பாளர், ஒரு தலைமைக் காவலர் மற்றும் நான்கு காவலர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. சிமாலா பிரசாத், "தீபக் வன்ஸ்கர் என்ற நபர் மீது 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த சமயத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள்தான் தற்போது வைரலாகி வருகின்றன.
அந்த வீடியோவில் இருக்கும் மூதாட்டி மற்றும் சிறுவன் மீதும் காத்னி காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இதில் சம்பந்தப்பட்ட போலீசார் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே டி.ஐ.ஜி. மோனிகா சுக்லா இன்று காத்னி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்" என்று தெரிவித்தார்.