தனி மாநில கொடியை ஏற்ற முயற்சி: முன்னாள் மந்திரி உள்பட 100 பேர் கைது
கலபுரகியில், தனி மாநில கொடியை ஏற்ற முயன்ற முன்னாள் மந்திரி உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
கலபுரகி:
தனி மாநில போராட்டம்
கர்நாடகத்தை 2 ஆக பிரித்து கல்யாண கர்நாடக என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று வடகர்நாடக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கல்யாண கர்நாடக தனி மாநில போராட்ட குழுவும் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று கர்நாடகத்தில் கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாடப்பட்டது. வடகர்நாடகத்தில் உள்ள கலபுரகியிலும் ராஜ்யோத்சவா கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் தனி மாநில போராட்ட குழுவினர் கர்நாடகத்தை 2 ஆக பிரித்து கல்யாண கர்நாடகா பெயரில் புதிய மாநிலம் உருவாக்க கோரி கலபுரகி டவுனில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்க்கிளில் போராட்டம் நடத்தினர். முன்னாள் மந்திரி எம்.எஸ்.பட்டீல் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மறைந்த மந்திரி உமேஷ் கட்டியின் உருவம் அச்சிடப்பட்ட தனி மாநில கொடியுடன் நகரில் ஊர்வலமாக வந்தனர்.
கைது
மேலும் தனி மாநில கொடியையும் ஏற்ற முயன்றனர். இதையடுத்து முன்னாள் மந்திரி எம்.எஸ்.பட்டீல் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி சென்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடகர்நாடகத்தை கர்நாடக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. கல்யாண கர்நாடக வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி பிற மாவட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
அரசு பணி, இடஒதுக்கீடு, ராஜ்யோத்சவா விருது வழங்குவதிலும் வடகர்நாடகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது. வடகர்நாடகத்திற்கு அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. இதனால் வடகர்நாடகம் வளர்ச்சி அடைய தெலுங்கானா போல கர்நாடகத்தை 2 ஆக பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்றனர்.