சொத்து தகராறில் தம்பியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி; அண்ணனுக்கு போலீஸ் வலைவீச்சு
உப்பள்ளியில் சொத்து தகராறில் தம்பியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
உப்பள்ளி;
சொத்து தகராறு
தார்வாா் மாவட்டம் உப்பள்ளி தாலுகா கேஷ்வாப்பூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் பாக்ளே. இவரது மனைவி சோனாலி. இதில் சஞ்சய்க்கும் அவரது தம்பி சாகருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் சஞ்சய்யும் அவரது மனைவி சோனாலியும் சோ்ந்து அடிக்கடி சாகரிடம் சொத்து குறித்து தகராறு செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் சாகர் சொத்தில் கேட்டு சஞ்சயிடம் தகராறு செய்துள்ளார். ஆனால் சஞ்சய் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
கத்திக்குத்து
இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தம்பி என்றும் பார்க்காமல் சாகரின் நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த சாகர், சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து சாகரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சஞ்சய் தலைமறைவாகிவிட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கேஷ்வாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து தகராறில் சாகரை அவரது அண்ணன் சஞ்சய் கத்தியால் கத்தி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
போலீஸ் வலைவீச்சு
இதுகுறித்து கேஷ்வாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சஞ்சயை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது.