இறந்த சிறுத்தையின் நகங்களை எடுத்து விற்க முயற்சி; 3 பேர் கைது


இறந்த சிறுத்தையின் நகங்களை எடுத்து விற்க முயற்சி; 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

என்.ஆர்.புரா அருகே பத்ரா அணைக்கட்டில் இறந்து கிடந்த சிறுத்தையின் நகங்களை எடுத்து விற்பனை செய்ய முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சிக்கமகளூரு:-

இறந்த சிறுத்தை

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பீதியடைந்துள்ள பொதுமக்கள் சிறுத்தையை பிடிக்கும்படி வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு என்.ஆர்.புராவில் உள்ள பத்ரா அணைக்கட்டு பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் அந்த சிறுத்தையின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சிறுத்தையின் கால் பகுதியில் இருந்த நகங்கள் மாயமாகியிருந்தது. இதையடுத்து கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு , சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அதே வனப்பகுதியில் குழிதோண்டி சிறுத்தையை புதைத்தனர்.

நகங்கள் விற்பனை; 3 பேர் கைது

இதையடுத்து சிறுத்தையின் நகங்களை வெட்டி எடுத்து சென்ற நபர்கள் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அணைக்கட்டுப்பகுதிக்கு வந்தவர்களின் விவரங்களை வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். விசாரணையில் கொப்பா கிராமத்தை சேர்ந்த 3 பேர் அணைப்பகுதிக்கு வந்து சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று அந்த 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கொப்பா கிராமத்தை சேர்ந்த சரத் (வயது 24), மஞ்சு (28), அனில் (32) என்ற தெரியவந்தது. விசாரணையில் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் என்.ஆர்.புரா வனத்துறையினர் விற்பனைக்காக வைத்திருந்த சிறுத்தை நகங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story