வீடு புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி
கடபாவில் வீடு புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற 2 வாலிபர்கள் 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூரு-
கடபாவில் வீடு புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற 2 வாலிபர்கள் 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமிக்கு மிரட்டல்
தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா கராயா கிராமத்தில் மரங்களை வெட்டும் பணி கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இதில், கொய்லா பகுதியை சேர்ந்த ஹசைனார் (வயது 24), அப்பாஸ் (30) ஆகியோரும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அவர்கள் அடிக்கடி அங்குள்ள 13 வயது சிறுமியின் வீட்டுக்கு சென்று தண்ணீர் குடித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டுக்கு சென்ற 2 பேரும், செல்போன் எண்ணை கொடுத்து போன் செய்யும்படி மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர். ஆனால் அந்த சிறுமி அவர்களுக்கு போன் செய்யவில்லை என தெரிகிறது.
2 பேர் கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கராயா கிராமத்துக்கு வந்த அவர்கள் 2 பேரும், சிறுமியின் வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதனால் சிறுமியும், அவளது தாயும் அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டனர். இதனை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும், அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.
ஆனாலும் அந்தப்பகுதி மக்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை புத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து புத்தூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹசைனார் மற்றும் அப்பாசை கைது செய்தனர். மேலும் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.