மனைவியின் ஆபாச படங்களை காட்டி பணம் கேட்டு மிரட்டல்- ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து
மனைவியின் ஆபாச படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டிய ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
பாகலூர், அக்.3-
நெருக்கமாக இருந்ததை படம் பிடித்தார்
பெங்களூரு பாகலூர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ் (வயது 37). கூலி தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஆரோக்கியதாஸ் என்ற ஆட்டோ டிரைவர் என்பவர் வசித்து வருகிறார். ஆரோக்கியதாசுக்கும், நாகராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஆரோக்கியதாஸ் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்தார்.
அப்போது நாகராஜின் மனைவி மற்றும் ஆரோக்கியதாசுக்கு இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது அவர்கள் 2 பேரும் தனிமையில் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் ஆரோக்கியதாஸ் அவற்றை தனது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார்.
பணம் கேட்டு மிரட்டல்
இந்த நிலையில் பணம் கேட்டு நாகராஜ் மனைவியை ஆரோக்கியதாஸ் மிரட்டி வந்துள்ளார். மேலும் பணம் கொடுக்காவிட்டால், ரகசிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி உள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண், தனது கணவர் நாகராஜிடம் இது
குறித்து கூறி உள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த நாகராஜ், ஆரோக்கியதாசை தனது வீட்டிற்கு அழைத்து பேசி உள்ளார். அப்போது அவரை எச்சரித்துள்ளார். எனினும் ஆரோக்கியதாஸ் அதை பொருட்படுத்தவில்லை.
கத்திக்குத்து
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உண்டானது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ், தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஆரோக்கியதாசின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் ஆரோக்கியதாஸ் சரிந்து விழுந்தார். இதுகுறித்து அந்த பகுதியினர் உடனடியாக சம்பிகேஹள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கைது
அவர்கள் படுகாயம் அடைந்த ஆரோக்கியதாசை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் தொழிலாளி நாகராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மனைவியின் ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டியதால், ஆரோக்கியதாசை கொலை செய்ய முயன்றது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.