தசரா கண்காட்சியில் சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு மையம்
தசரா கண்காட்சியில் சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மைசூரு:
மைசூரு தசரா விழாவை முன்னிட்டு அரண்மனை அருேக உள்ள தசரா கண்காட்சி வளாகத்தில் தசரா கண்காட்சி நடந்து வருகிறது.
தசரா கண்காட்சியை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். இதில் சுற்றுலா, மருத்துவம், விவசாயம், தூய்மை உள்பட பல்வேறு வாழ்வாதார விழிப்புணர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் போலீஸ்துறை சார்பில் சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மைசூரு மாநகரா போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து அவர் பேசியதாவது:-
செல்போன்கள் மூலமாக இணையதளங்களில் வேலை, பரிசு என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் மோசடிக்கு ஆளாகாமல் இருக்க மக்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு மையம், தசரா கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு மையத்தில் பொதுமக்கள் மோசடிக்கு உள்ளாகாமல் இருப்பது, எவ்வாறு புகார் அளிப்பது என்பன பற்றி தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இவருடன் தசரா கண்காட்சி வாரிய தலைவர் மிர்லே சீனிவாச கவுடா உள்பட பலர் இருந்தனர்.