ஆயுத பூஜை, விஜயதசமி நாளன்று கர்நாடகத்தில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நடைபெறாது-டி.கே.சிவக்குமார் தகவல்
ஆயுத பூஜை, விஜயதசமி நாளன்று கர்நாடகத்தில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நடைபெறாது என்று டி.கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மைசூரு:
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மைசூரு காங்கிரஸ் பவனத்தில் நடந்த கட்சி ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது:-
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை வருகிற 30-ந்தேதி கர்நாடகத்திற்கு சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை வழியாக வருகிறது. அதன்படி குண்டல்பேட்டையில் ராகுல் காந்தி ஒரு நாள் தங்கி, மறுநாள் 1-ந்தேதி மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா பதனவாளு கிராமத்திற்கு சென்று அங்கு காந்திஜி வந்து சென்ற காதிகிராம நெசவாளர் மையத்தை பார்வையிடுகிறார். அதன்பிறகு மைசூருவுக்கு வந்து தசரா கண்காட்சி வளாகத்தில் தங்கி, 3-ந் தேதி மைசூருவில் இருந்து புறப்பட்டு ஹாசன், பல்லாரி, ராய்ச்சூர் மாவட்டங்களில் பாதயாத்திரை மேற்கொண்டு தெலுங்கானா செல்கிறார்.
மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் 3 நாட்கள் பாதயாத்திரை உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 22 நாட்கள் 510 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை இருக்கிறது. இந்த நாட்களுக்கு இடையே ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாளன்று ஆகிய 2 நாட்கள் மட்டும் பாதயாத்திரை நடைபெறாது. அதற்கு அடுத்த நாட்களில் பாதயாத்திரை தொடங்கப்படும். எம்.எல்.ஏ., எம்.எல்.சி. மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதிகளில் இருந்து 5 ஆயிரம் பேரை பாதயாத்திரையில் பங்கேற்க வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.