மாயமான தாயை கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு
வாய் பேச முடியாத மனநலம் பாதித்த தாய் மாயமாகிவிட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தந்தால் ரூ.50 ஆயிரம் பரிசு தருவதாகவும் மகள் அறிவித்துள்ளார்.
கோலார்
மாயமான பெண்
கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமம்மா (வயது 52). இவருக்கு திருமணமாகி பிரமிளா என்ற மகள் உள்ளார். லட்சுமம்மாவுக்கு பிறவியிலேயே வாய் பேச முடியாது. இந்த நிலையில் அவருக்கு லேசான மன நல பாதிப்பும் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு லட்சுமம்மா வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
போலீசில் புகார்
இதைத்தொடர்ந்து தனது தாயை கண்டுபிடித்து தரும்படி பிரமிளா, முல்பாகல் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து லட்சுமம்மாவை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கே இருக்கிறார்?. அவரது கதி என்ன என்பது தெரியவில்லை.
ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிப்பு
இதையடுத்்து பிரமிளா, தனது தாயை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். இதனால் அவர் மாயமான தனது தாய் லட்சுமம்மாவை கண்டுபிடித்து தரும்படியும், கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு தருவதாகவும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் அவர் தனது தாய் புகைப்படத்துடன், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இன்றைய நவீன உலகில் தாய்-தந்தையை முதியோர் இல்லங்களில் சேர்க்கும் நிலையில், மாயமான தாயை கண்டுபிடிக்க பாசக்கார மகள் எடுத்துள்ள இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.