பயங்கரவாத வழக்கில் கைது: பெங்களூருவை சேர்ந்தவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
பயங்கரவாத வழக்கில் ஜாமீன் கோரிய பெங்களூருவை சேர்ந்தவரின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு
பயங்கரவாத வழக்கில் ஜாமீன் கோரிய பெங்களூருவை சேர்ந்தவரின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத இயக்கம்
பெங்களூரு பிரேசர் டவுன் பகுதியை சேர்ந்தவர் இர்பான் நசீர் (வயது33). கடந்த 2013-ம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் உள்பட 4 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பண ஆசை காட்டி சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு அனுப்பி வைத்ததாக என்.ஐ.ஏ. குற்றம்சாட்டியது.
இந்த நிலையில் இர்பான் நசீர், தனக்கு ஜாமீன் வழங்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் என்றும், தனக்கு ஜாமீன் வழங்குமாறும் கோரியுள்ளார். இந்த மனு ஐகோர்ட்டில் நீதிபதிகள் சோமசேகர், சிவங்சகர் அமரன்னவர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
லட்சக்கணக்கான ரூபாய்
அப்போது என்.ஐ.ஏ. சார்பில் ஆஜரான வக்கீல் பிரசன்னகுமார் வாதிடுகையில், "தான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் என்று கூறி பயங்கரவாத வழக்கில் கைதானவர் ஜாமீன் கேட்டுள்ளார். அவர் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்றால் அவருக்காக ஆஜராக லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூலிக்கும் மூத்த வக்கீல்கள் யாரால் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பிரபலமானவர்களாக உள்ளனர். அவர்களுக்கு இத்தகைய வக்கீல்களை ஏற்பாடு செய்வது யார்?. இதை கவனமாக பார்க்க வேண்டியுள்ளது" என்றார்.
குற்றம்சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சந்தேஷ் சவுட்டா, "இர்பான் நசீர் எந்த பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இந்தியா உள்பட சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஆகும். அதனால் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வராது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜாமீன் மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.