பெங்களூருவில் பள்ளியின் முன்பு உள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்த தடை
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக பள்ளிகள் தங்களுக்கு சொந்தமான வாகனங்களை மைதானத்தில் நிறுத்தவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து சிறப்பு கமிஷனர் அப்துல் சலீம் அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக பள்ளிகள் தங்களுக்கு சொந்தமான வாகனங்களை மைதானத்தில் நிறுத்தவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து சிறப்பு கமிஷனர் அப்துல் சலீம் அறிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசல்
பெங்களூரு நகரில் காலை, மாலை நேரங்களில் அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் போக்குவரத்து பிரச்சினை குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து சிறப்பு கமிஷனராக அப்துல் சலீம் என்பவரை அரசு நியமித்தது. அவர் பதவி ஏற்றதில் இருந்து போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஹெப்பால் மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து அப்துல் சலீம் உத்தரவிட்டு இருந்தார்.
பள்ளிகள் முன்பு வாகனங்கள்
இந்த நிலையில் பெங்களூருவில் பள்ளிகள் முன்பு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக ரெசிடென்சி ரோடு, பிரிகேட் ரோடு, எச்.எஸ்.ஆர். லே-அவுட் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் பள்ளிகளுக்கு முன்பு, அந்த பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நிலையில் பள்ளிகள் முன்பு பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து சிறப்பு கமிஷனர் அப்துல் சலீம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாதுகாப்பான பாதை திட்டம்
பெங்களூரு நகரில் பள்ளிகள் முன்பு உள்ள சாலைகளில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் இனி காலை 8.30 மணிக்கு மேல் பள்ளிகள் முன்பு வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களை இறக்கிவிட்ட பின்னர் வாகனங்களை மைதானத்தில் கொண்டு சென்று நிறுத்த வேண்டும். இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
பள்ளிகளில் வகுப்புகளை காலையில் முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்களிடம் கூறியுள்ளோம். மாணவர்களை பத்திரமாக பள்ளிக்கு அழைத்து செல்வதை உறுதி செய்ய பாதுகாப்பான பாதை திட்டம் செயல்படுத்தப்படும். இதுபோல பள்ளிகள் முன்பு நெரிசல் ஏற்படுவதை தடுக்க மாணவர்களை அழைத்து செல்ல வரும் பெற்றோர்களுக்கு தனியாக வழிகள் அமைத்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.