பெங்களூரு பனத்தூர் குறுகிய ரெயில்வே சுரங்க பாதையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் மாணவர்கள்
பெங்களூரு பனத்தூரில் குறுகிய ரெயில்வே சுரங்க பாதையால் தினமும் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் சிக்கி பள்ளி மாணவ-மாணவிகள் தினமும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சுரங்க பாதையை அகலப்படுத்த கோரிக்கை வலுத்து வருகிறது.
மக்கள் தொகை பெருக்கம்
கெம்பேகவுடாவால் நிர்மாணிக்கப்பட்ட பெங்களூரு நகரம் இன்று உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது.இதற்கு பெங்களூருவை மையம் கொண்டு உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தான் காரணம். இங்கு உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர். மேலும் பெங்களூருவில் ஏராளமான தொழில்கள் கொட்டி கிடப்பதால் இங்கு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதன்காரணமாக பெங்களூரு நகரில் மக்கள் தொகையும், வாகன பெருக்கமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக எலெக்ட்ரானிக் சிட்டி, மகாதேவபுரா, ஒயிட்பீல்டு பகுதியில் தான் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. இதனால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வசித்து வருகின்றனர். ஐ.டி. நிறுவன ஊழியர்கள் செல்லும் சாலைகள் எப்போதும் பரபரப்பாக காணப்படுகின்றன.
திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
இந்த நிலையில் பெங்களூருவில் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் அதிகம் வசித்து வரும் ஒரு பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லும் ஐ.டி. நிறுவன ஊழியர்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். அந்த இடத்தின் பெயர் பனத்தூர். பெல்லந்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள சுரங்கபாதையில் இருந்து வலது கை பக்கம் திரும்பினால் பனத்தூர், பனத்தூர் தின்னே ஆகிய இடங்களுக்கு சென்று விடலாம்.
இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினமும் நொந்து நூலாகி வருகிறார்கள் . இதற்கு காரணம் குறுகிய ரெயில்வே சுரங்கபாதை தான். அந்த சுரங்கபாதையில் ஒரே நேரத்தில் இருதிசையில் இருந்து வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் அந்த சுரங்கபாதை அருகே கட்டுக்கடங்காத வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி போகின்றனர். குறிப்பாக பள்ளி வாகனங்களும், குழந்தைகளை வாகனங்களில் அழைத்து செல்லும் பெற்றோர்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வதால் மாணவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
போராட்டம்
குறுகலான சுரங்கபாதையை அகலப்படுத்த வேண்டும் என்று பனத்தூர் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனால் பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்ற மனநிலையில் இறங்கிய மக்கள் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு உள்ளனர். இரவில் கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி பனத்தூர் பகுதி குடியிருப்புவாசிகள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆனாலும் அவர்கள் போராட்டத்திற்கு இதுவரை எந்த முடிவும் கிடைக்கவில்லை.
இதுபற்றி அப்பகுதி மக்கள் தங்களது வேதனையை பகிர்ந்து கொண்டனர். அதன்விவரம் பின்வருமாறு:-
செவி சாய்க்கவில்லை
-பனத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நரேஷ் ஜெயின் கூறுகையில், பனத்தூரில் இருந்து காடுபீசனஹள்ளி 2 கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது. ஆனால் சாலையின் மோசமான நிலை, குறுகிய சுரங்கபாதையால் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசலால் 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல 1½ முதல் 2 மணி நேரம் ஆகிறது. இதனால் சரியான நேரத்திற்கு என்னால் அலுவலகம் செல்ல முடிவது இல்லை. எனது குழந்தைகளும் தினமும் 2 மணி நேரம் தாமதமாக தான் பள்ளிக்கு செல்கிறார்கள். சுரங்கபாதையை அகலப்படுத்த வேண்டும் என்ற எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எங்களது கோரிக்கைக்கு அதிகாரிகள் தயவு செய்து செவிசாய்க்க வேண்டும்.
பனத்தூர் தின்னே பகுதியில் வசித்து வரும் ஷில்பா கூறுகையில், நான் எனது மகளை தினமும் பள்ளிக்கு காரில் அழைத்து சென்று விட்டு, வீட்டிற்கு அழைத்து வருகிறேன். பனத்தூரில் இருந்து காடுபீசனஹள்ளி வரை சாலை குறுகலாக தான் உள்ளது. 'எஸ்' வடிவிலான அந்த சாலையில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனது மகளை தினமும் காலதாமதமாக தான் பள்ளிக்கு அழைத்து செல்கிறேன். வீட்டிற்கும் சரியான நேரத்திற்கு வர முடிவது இல்லை. மழை காலத்தில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் மழை காலத்தில் வெளியே செல்லவே பயமாக உள்ளது. எங்கள் பிரச்சினையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
பள்ளிக்கு செல்ல முடியவில்லை
பனத்தூர் தின்னேயே சேர்ந்த மாணவன் அம்ருத் கூறுகையில், எனது பள்ளிக்கு செல்லும் சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் தினமும் 2½ மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தான் பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளது. தேர்வு நாட்களில் வழக்கத்தை விட முன்கூட்டியே செல்ல வேண்டி உள்ளது. பள்ளிக்கு தினமும் தாமதமாக செல்வதால் கல்வி பயிலுவதில் கஷ்டம் ஏற்படுகிறது. சாலைகளை சீரமைத்து நாங்கள் பள்ளிக்கு செல்ல அரசு உதவ வேண்டும்.
மற்றொரு பள்ளி மாணவி கூறுகையில், தினமும் நாங்கள் குறுகலான சுரங்கபாதை காரணமாக வாகன நெரிசலில் சிக்கி தவித்து வருகிறோம். இதனால் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. மழை பெய்தால் இங்குள்ள நிலை படுமோசம். இதுபற்றி எங்கள் பெற்றோரும், நாங்களும் பல முறை போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் இந்த பிரச்சினையை எந்த அதிகாரிகளும் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. தினமும் நாங்கள் பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் வரை கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பிரச்சினையை தீர்க்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர்களை தவிர பனத்தூரில் வசித்து வரும் பள்ளி மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோரும் பனத்தூரில் உள்ள குறுகிய ரெயில்வே சுரங்க
பாதையை அகலப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் கர்நாடக அரசை வலியுறுத்தி உள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மாநகராட்சி கமிஷனர் சொல்வது என்ன?
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத் கூறுகையில், பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள பனத்தூரை மாரத்தஹள்ளி வெளிவட்ட சாலையுடன் இணைக்கும் பிரதான சாலை எஸ் வடிவில் குறுகலாக உள்ளது. இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுபற்றி எனது கவனத்திற்கு வந்து உள்ளது. இந்த குறுகிய சாலையை விரிவுப்படுத்தும் திட்டம் எங்களிடம் இருந்தது. ஆனால் அதற்கு அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. தற்போது சாலையை அகலப்படுத்த ரூ.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் நிலத்தை கையகப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது என்றார்.
இதுபற்றி பெயர் கூறாத இன்னொரு மாநகராட்சி அதிகாரி கூறும்போது, சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தும் குடியிருப்புவாசிகள் சாலையை அகலப்படுத்த நிலம் தருவது இல்லை. இப்படி செய்தால் சாலையை எப்படி அகலப்படுத்த முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
போக்குவரத்து போலீஸ்காரர் சொல்வது என்ன?
அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் ஒயிட்பீல்டு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் நாகராஜ் என்பவர் கூறியதாவது:-
பனத்தூரில் இருந்து காடுபீசனஹள்ளி செல்லும் சாலையில் எந்த நேரம் பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய தினமும் சுழற்சி அடிப்படையில் போக்குவரத்து போலீசார் வேலை செய்து வருகிறோம். நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க முடியவில்லை. அனைவரும் அவசர வேலையாக செல்கிறார்கள். யாரையும் எங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சுரங்கபாதை குறுகலான சாலையை அகலப்படுத்தினால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
====================