பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையம்
ரூ.480 கோடியில் பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் உலக தரத்தில் மேம்படுத்தப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
பெங்களூரு:-
தென்மேற்கு ரெயில்வே பெங்களூரு கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 நடைமேடைகள்
பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் உலக தரத்தில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புறநகர் ரெயில் போக்குவரத்திற்காக புதிய ரெயில் நிலையம் பசுமை சூழலில் அமைக்கப்பட உள்ளது. பெங்களூரு நகரை பிரதிபலிக்கும் வகையில் கட்டிடம் நிறுவப்படும். இந்த கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் மிக பழமையானது. ரூ.45 கோடியில் ரெயில் நிலையத்தில் 'யார்டு' மேம்படுத்தப்படும்.
தனியாக 2 நடைமேடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும் அங்கு கூடுதலாக 3 ரெயில் பாதைகளும் அமைக்கப்படும். இதனால் ரெயில்கள் அங்கு வந்து செல்ல வசதியாக இருக்கும். இதன் மூலம் சிட்டி ரெயில் நிலையத்தில் நெருக்கடி குறையும். நேதாஜி ரோட்டை இணைக்கும் வகையில் அங்கு ஒரு பறக்கும் நடைபாலம் அமைக்கப்படுகிறது.
குளுகுளு வசதி
இந்த பணிகள் வருகிற 2023-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக ரூ.480 கோடி செலவில் விமான நிலையத்தை போன்று அதிநவீன வசதிகளுடன் உலக தரத்தில் கன்டோன்மென்ட் ரெயில் நிலைய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ரெயில் நிலையத்தில் வர்த்தக நடவடிக்கைளும் அனுமதிக்கப்படும். ரெயில் நிலையத்தில் முழுவதும் குளுகுளு வசதி செய்யப்படுகிறது. ரெயில் வருகை மற்றும் புறப்பாடுகளுக்கு தனித்தனியாக பாதைகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் பயணிகள் நெரிசல் ஏற்படுவது தடுக்கப்படும். தரைதளம் மற்றும் 5 மாடிகளுடன் வாகன நிறுத்த கட்டிடம்
கட்டப்படும். நடைமேடைக்கு மேல் பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளுக்கான வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். மழைநீர் சேமிப்பு, எல்.இ.டி. மின் விளக்குகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மின் சேமிப்பு முறைகளுடன் பசுமை கட்டிடம் கட்டப்படுகிறது.
தேவையான வசதிகள்
மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும். 'வை-பை', பயணிகளுக்கு வழிகாட்டும் நவீன தகவல் பலகைகள், உள்ளூர் போக்குவரத்து வசதியுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல், பயணிகளை இறக்கி விடவும், ஏற்றி செல்லவும் விசாலமான இடம் ஒதுக்குதல் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த பணிகள் அனைத்தையும் 36 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.